Last Updated:
குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் புதிய அரசில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது.
மணிப்பூரில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைந்த மறுநாளே மீண்டும் வன்முறை வெடித்தது. துணை முதலமைச்சர் உட்பட மூன்று எம்.எல்.ஏக்களை கொலை செய்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அப்போது, இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தொடர் கலவரத்தில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
வன்முறை நீடித்ததால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரேன் சிங் தலைமையிலான அரசு பதவி விலகியது. அதைத்தொடர்ந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மணிப்பூரில் வரும் 12ஆம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி ஓராண்டை நிறைவு செய்ய இருந்தது. இதற்கிடையே, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம்பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூடி புதிய முதலமைச்சராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வுசெய்யப்பட்டு பதவியேற்றார். இரு துணை முதலமைச்சர்களில் ஒருவராக குக்கி சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நெம்ச்சா கிப்ஜென் (Nemcha Kipgen) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் புதிய அரசில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. குக்கி சமுகத்தினர் துணை முதலமைச்சர் நெம்ச்சா கிப்ஜென் புகைப்படத்துடன் ‘துரோகி’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
துய்போங் பகுதியில் போராட்டக்காரர்கள் டயர்களுக்குத் தீ வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளை அடித்து உடைத்து தீவைத்தனர். பாதுகாப்பு படையினர் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அங்கு நிலைமை மோசமடைந்தது. குக்கி சமுகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் வன்முறைக் களமாக காட்சியளிக்கிறது.
மேலும் துணை முதலமைச்சர் நிம்ச்சா கிப்ஜெனை கொலை செய்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், புதிய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஹமார்-ஜோமி (Hmar-Zomi) இனத்தை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களை கொலை செய்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் சன்மானம் வழங்கப்படும் என்று குக்கி அமைப்பு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கலைக்கப்பட்டு முதலமைச்சர் பதவியேற்ற அடுத்த நாளே மீண்டும் வன்முறை உருவாகியுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினரும், துணை ராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை… துணை முதல்வர் உட்பட 3 எம்.எல்.ஏக்களை கொலை செய்தால் சன்மானம் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி


