Last Updated:
T20 உலகக் கோப்பை இந்தியா இலங்கை நடத்த, 20 அணிகள் 55 போட்டிகளில் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்டவை டாப் சீட்ஸ். இறுதி அகமதாபாத்தில்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் T20 உலகக் கோப்பை தொடர் சனிக்கிழமை தொடங்குகிறது.
ஆடவருக்கான T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி அகமதாபாத்தில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவுக்கு எதிராக வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியை புறக்கணிக்க உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில், மற்ற அணிகள் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள 20 அணிகள், 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் A-வில் இந்தியா , நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. குரூப் B-யில் ஆஸ்திரேலியா , அயர்லாந்து, ஓமன், இலங்கை , ஜிம்பாப்வே அணிகள் உள்ளன. குரூப் C-யில் இங்கிலாந்து , இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள் நாடுகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் D-யில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து , தென்னாப்பிரிக்கா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் உள்ளன. குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் ரவுண்ட் ராபின் முறையில் மற்ற அணிகளுடன் மோதும்.. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 8 அணிகளும் தற்போதைய ஐசிசி தரவரிசை மற்றும் 2024 உலகக்கோப்பை முடிவுகளின் அடிப்படையில் “டாப் சீட்ஸ்”ஆகக் கருதப்படுகின்றன.
ஒரு வேளை இந்த 8 அணிகளில் ஏதேனும் ஒன்று Group Stage-லிருந்து வெளியேறினால், அந்த இடத்தைப் பிடிக்கும் புதிய அணி அந்த சீடிங் இடத்தைப் பெற்று சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும். உலகக் கோப்பை தொடரில் பங்குபெறும் 20 அணிகளும் 4 போட்டிகளில் விளையாடும். சூப்பர் 8 சுற்றில் வெளியேறும் அணிகள் 7 போட்டிகளில் களம் காணும்.. அரையிறுதி போட்டியில் தோல்வியடையும் அணிகள் 8 போட்டிகளிலும் இறுதிக்கு தகுதி பெறும் அணிகள் 9 போட்டிகளிலும் விளையாடும். நடப்பு சாம்பியனான இந்தியா, 2024 தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் கோப்பையை வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்தது.
டி20 உலகக்கோப்பைத் தொடர் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. பின்னர் 2024- ஆம் ஆண்டும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. மேற்கிந்திய தீவுகள் அணி, 2012 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளில் வெற்றி வாகை சூடியது… இதேப்போல் இங்கிலாந்து 2010 மற்றும் 2022- ஆம் ஆண்டுகளில் கோப்பையை தன்வசமாக்கிக் கொண்டது. 2009-ஆம் ஆண்டில் பாகிஸ்தானும், 2014-இல் இலங்கையும், 2021-ல் ஆஸ்திரேலியாவும் T20 சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.
20 அணிகள்; 4 குரூப்கள்
- குரூப் A: இந்தியா (X1), நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் (Y3), அமெரிக்கா.
- குரூப் B: ஆஸ்திரேலியா (X2), அயர்லாந்து, ஓமன், இலங்கை (Y4), ஜிம்பாப்வே.
- குரூப் C: இங்கிலாந்து (Y1), இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள் (X3).
- குரூப் D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து (Y2), தென்னாப்பிரிக்கா (X4), ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
குரூப்- 1
- இந்தியா (A1)
- இங்கிலாந்து (C1)
- ஆஸ்திரேலியா (B1)
- நியூசிலாந்து (D1)
குரூப்- 2
- மேற்கிந்தியத் தீவுகள் (C2)
- பாகிஸ்தான் (A2)
- தென்னாப்பிரிக்கா (D2)
- இலங்கை (B2)
நாடு வெற்றிகள் வென்ற ஆண்டுகள்
- இந்தியா 2 2007, 2024
- மேற்கிந்தியத் தீவுகள் 2 2012, 2016
- இங்கிலாந்து 2 2010, 2022
- பாகிஸ்தான்: 1 முறை (2009)
- இலங்கை: 1 முறை (2014)
- ஆஸ்திரேலியா: 1 முறை (2021)


