Last Updated:
மணிப்பூரில் யம்னம் கெம்சந்த் சிங் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். குகி மற்றும் நாகா மக்களின் நம்பிக்கை, வீடிழந்தோர் நலன், பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை முக்கிய சவால்கள்.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் முதலமைச்சர் கெம்சந்த் சிங் முன் உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.
மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. பின்னர் நாளடைவில் இந்த மோதல் பெரும் வன்முறையாக மாறியது. இந்திய வரலாற்றில் கருப்பு புள்ளியாக மாறிவிட்ட இந்த வன்முறையை சரியாக கையாளவில்லை என விமர்சனங்கள் எழுந்ததால், முதலமைச்சராக இருந்த என்.பிரேன் சிங் ராஜினாமா செய்தார். பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா ஆளுநராக நியமிக்கப்பட்டு நிர்வாக முடிவுகளை எடுத்து வந்தார்.
இந்நிலையில், புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட யம்னம் கெம்சந்த் சிங் இம்பாலில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டார். யம்னம் கெம்சந்த் சிங் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள சிங்ஜாமே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். 2017 முதல் 2022 வரை சபாநாயகராக இருந்தவர். பின்னர் பிரேன் சிங் அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றியவர். வன்முறை உச்சக்கட்டத்தில் இருந்த போது, பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியவர்களில் மிகவும் முக்கியமானவர்.
மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், குகி பழங்குடியின மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர். வன்முறைக்குப் பிறகு குகி மக்கள் வசிக்கும் நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்ற முதல் மெய்தி தலைவர். புதிய முதலமைச்சரான யம்னம் கெம்சந்த் சிங் முன் மலைபோல் சவால்கள் குவிந்துள்ளன. முதலில், குகி- மற்றும் நாகா பழங்குடியின மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். கடந்த ஆண்டு குகி கிராமங்களுக்கு அவர் மேற்கொண்ட ‘சமாதானப் பயணம்’ ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், இரு சமூகங்களையும் ஒரே மேசைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினமான காரியமாக பார்க்கப்படுகிறது.
வன்முறையால் வீடுகளை இழந்த 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களின் வீடுகளை மீண்டும் கட்டித் தருவது, வாழ்வாதாரத்தை உறுதி செய்வது, சொந்த இடங்களுக்குத் திரும்ப வழிவகை செய்வது கடுமையான நெருக்கடிகளில் ஒன்று. கலவரத்தின்போது கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அதிநவீன ஆயுதங்கள் இன்னும் ஆயுதக் குழுக்களிடமும் உள்ளன. இந்த ஆயுதங்களை மீட்கும் அதே வேளையில், மீண்டும் வன்முறை வெடிக்காமல் தடுக்க வேண்டும். குகி- இன மக்கள் தங்களுக்கு தனி நிர்வாகம் அல்லது யூனியன் பிரதேசம் வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதற்கு செவி சாயக்காமல் மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
Feb 05, 2026 10:58 AM IST


