Last Updated:
நாளை மறுதினம் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.
ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கன் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
16 அணிகள் மோதும் யு 19 உலகக்கோப்பை தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகளில் இருந்து 12 அணிகள் சூப்பர் 6 பிரிவுகளுக்கு முன்னேறின.
இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று 2 ஆவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் பைசல் ஷினோசடா 110 ரன்களும், அசிசுல்லா மியாகில் 101 ரன்களும் குவித்தனர். இதையடுத்து 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இல க்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் 115 ரன்கள் குவித்தார்.
கேப்டன் ஆயுஷ் மாத்ரே 62 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 68 ரன்களும் அதிரடியாக குவித்தனர். 41.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 311 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


