Last Updated:
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான T20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட மறுத்ததால், ஐசிசி துணை தலைவர் இம்ரான் கவாஜா பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை விளையாட மறுப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தானுடன் ஐசிசி துணைத் தலைவர் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 7ஆம் தேதி ஐசிசி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தங்கள் அணி விளையாடாது என எந்தக் காரணத்தையும் குறிப்பிடாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள போட்டி என்பதால் இது நடைபெறவில்லை என்றால் சுமார் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை மொத்த இழப்பு ஏற்படும் என கணிக்கப்படுகிறது. மேலும் ஒளிபரப்பு உரிம ஒப்பந்தத்தின்படி இந்த போட்டியில் பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால் அதற்கான எதிர்வினைகளையும் அந்த அணி எதிர்கொள்ள நேரிடும்.
தனது முடிவு தொடர்பாக ஐசிசிக்கு அதிகாரப்பூர்வ தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் தெரிவிக்காத நிலையில், அந்த அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜாவை ஐசிசி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இந்த போட்டி நடைபெறவில்லை என்றால் ஐசிசியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


