இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து சிறீதரன் எம். பி.யை நீக்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசமைப்பு பேரவையில் இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க சிறீதரன் எம். பி. ஆதரவளித்தார் என்று கூறப்படும் விவகாரம் சர்ச்சையானது.
இதையடுத்து அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.
தீர்மானமாக எடுக்கப்படவில்லை
இந்நிலையில், தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், பதில் பொதுச் செயலாளரான எம். ஏ. சுமந்திரன் ஆகியோரின்
ஒப்பங்களுடன் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு
பிரதியிட்டு சபாநாயகருக்கு இந்தக் கடிதம் நேற்றைய தினம்
அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் அரசமைப்பு பேரவையின் உறுப்பினர்
பதவியிலிருந்து பதவி விலகல் செய்யும் வரை சிறீதரன் எம். பி.
அந்தப் பதவியில் தொடர முடியாது என்று தமிழ் அரசு
கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
அறிவிக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் குழுவின் முடிவின் பிரகாரமே இந்தத் தீர்மானம்
எடுக்கப்பட்டதாகவும் கட்சியின் தலைவரின் அறிவுறுத்தலின் படியே இந்தத் தகவலை அறிவிப்பதாகவும் தமது கட்சியின் எம். பி.க்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நீக்கும் முடிவு கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

