Last Updated:
Robo | ரோபோவின் செயலை கண்டு அங்கிருந்த காவலர்கள் மட்டுமின்றி பயணிகளும் ஆச்சரியமடைந்தனர்.
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித உருவ ரோபோ, குற்றவாளிகளை அடையாளம் கண்டு காவல் துறையிடம் தெரிவித்து, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்திய ரயில்வேயில் முதன்முறையாக ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மனித உருவ பாதுகாப்பு ரோபோ தான், இன்றைய ஹாட் டாபிக். ஏஎஸ்சி அர்ஜுன் என்ற பெயர் கொண்ட இந்த ரோபோ, ரயில் நிலையத்தில் 8 நடைமேடைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோ, தன்னாட்சியாக நடந்து சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கிறது. இதில் உள்ள 360 டிகிரி கேமராக்கள் நேரடி காட்சிகளை உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகின்றன.
அதுமட்டுமின்றி, காவல்துறை உங்கள் நண்பன் என்பது போல, பயணிகள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இதனிடமே கேட்டு பெறலாம். பயணிகள் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளை தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலத்தில் வழங்குவதால் ஒரு சக மனிதனை போல இதனுடன் கலந்துரையாடலாம். மேலும், தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டறிந்தால் அவர்களின் புகைப்படங்கள் இதன் தரவுத்தளத்தில் இருக்குமாயின், அவர்களைக் கண்டவுடன் ரயில்வே பாதுகாப்பு படைக்கு எச்சரிக்கை அனுப்பி விடும்.
அப்படி தான், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த குற்றவாளிகள் இருவரை பிடித்துக் கொடுத்துள்ளது, இந்த ரோபோ. வழக்கம்போல, நேற்று ரோந்துப் பணியை மேற்கொண்ட ரோபோ ASC அர்ஜுன், சந்தேக நபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளது. அவரது முகப் படத்தை, ஏற்கனவே உள்ள குற்றாவாளிகளின் தரவுத்தளத்துடன் இருந்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பியுள்ளது.
ரோபோவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பணியில் இருந்த காவல் அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய நபர் மற்றும் அவரது கூட்டாளியை கையும் களவுமாகப் பிடித்தனர். விசாரணையில் கடப்பா சிவா (Hadapa Shiva ), அவரது நண்பர் பங்காரு என்பது தெரியவந்தது. இருவர் மீதும் ஒடிசா மாநிலம் ராயகடா(Rayagada ) உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை, ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், பிடிபட்ட இருவரும் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த தகவல் ராயகடா காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஏஎஸ்சி அர்ஜுனின் சாதனையைப் பாராட்டிய கிழக்கு கடற்கரை ரயில்வேயின் பொது மேலாளர் பரமேஷ்வர் ஃபங்க்வால்(Parmeshwar Funkwal), பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தொழில்நுட்ப தலையீடுகளின் செயல் திறனை இந்த சம்பவம் நிரூபித்ததாகக் கூறினார். ரோபோவின் செயலை கண்டு அங்கிருந்த காவலர்கள் மட்டுமின்றி பயணிகளும் ஆச்சரியமடைந்தனர்.


