Last Updated:
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் பாஜகவிற்கு 37 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஓராண்டாக குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு புதிய முதல்வராக பாஜகவின் யும்னம் கெம்சந்த் நிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய உள்ளது.
மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே மிகக் கடுமையான இன மோதல்கள் நிலவி வந்தன. இந்த வன்முறை காரணமாக நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அப்போதைய முதலமைச்சர் என். பிரேன் சிங் மீது இரு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஏற்பட்ட அரசியல் முட்டுக்கட்டையால், 2025 பிப்ரவரி மாதம் அவர் பதவி விலகினார், அதைத் தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று டெல்லியில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர். முன்னதாக மணிப்பூர் சட்டப்பேரவையின் சபாநாயகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், முந்தைய பிரேன் சிங் அமைச்சரவையில் கல்வி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.


