Last Updated:
புதுச்சேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செய்வினை நீக்குவதாக கூறி போங்காட்டம் ஆடிய போலி சாமியார்கள், நகை மற்றும் பணத்தை சுருட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பரிகார பூஜை செய்வதாக கூறி, நூதன முறையில் நகை மற்றும் பணத்தை சுருட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்வினை நீக்குவதாக கூறி போங்காட்டம் ஆடிய போலி சாமியார்கள் சிக்கியது எப்படி?
தவசி படத்தில் பாக்கெட்டில் வைத்திருக்கும் பணத்தை எடுத்து கீழே வைக்காவிட்டால் ரத்தம் கக்கி சாவாய் என்று வடிவேலை மிரட்டும் காட்சி போன்று, பெண் ஒருவரிடம் செய்வினையை நீக்காவிட்டால் ரத்தம் கக்கி சாவாய் என அச்சுறுத்தி ஆட்டையை போட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து தாயக்கட்டை உருட்டிய இருவருக்கும் சிறையில் பூஜை வைக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன?
புதுச்சேரியில் முத்தியால்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கோமளவள்ளி. 59 வயதான இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலை 11 மணியளவில் ஜோதிடம் பார்ப்பதாக கூறி இளைஞர் உட்பட இருவர் அங்கு வந்துள்ளனர். கோமளவள்ளியிடம் வந்த அவர்கள், உங்கள் வீட்டில் யாரோ செய்வினை வைத்துள்ளதாக கூறியுள்ளனர். செய்வினையை முடக்காவிட்டால் ரத்தம் கக்கி சாவீர்கள் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். அதைக் கேட்டு ஆடிப்போன பெண், செய்வினையை நீக்குவதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா என்று அப்பாவியாக கேட்டுள்ளார்.
செய்வினை என்று கூறியதற்கே அந்தப் பெண் சரணடைந்ததால், இவர்தான் இன்றைக்கு போணி என்று முடிவு செய்து அவர்கள் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளனர். சிறப்பு பூஜை செய்தால் உங்களை முடக்கியுள்ள செய்வினை சரியாகிவிடும் என்றும், அதற்கு தங்களிடம் கைவசம் பரிகார பலன் உள்ளதாகவும் அளந்து விட்டுள்ளனர். அப்படியே உண்மை என நம்பிய கோமளவள்ளி, ஜோதிடர்கள் கூறியதற்கு எல்லாம் தலையை ஆட்டியுள்ளார்.
அப்போது பரிகாரம் செய்ய தங்க நகை வேண்டும் எனக் கூறியதும், 2 கிராம் மோதிரம் மற்றும் 3 கிராம் கம்மலையும் கழற்றி கொடுத்துள்ளார். பூஜை தொடங்கியதும் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் கலந்த நீரில் நகைகளைப் போட்டுள்ளனர். பூஜைகள் முடிந்த பின்னர் காணிக்கையாக 18 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கத்தையும் வாங்கி சுருட்டி வைத்துள்ளனர். இறுதியாக, மஞ்சள் நீரில் உள்ள நகைகளை மாலை 6 மணிக்கு மேல் தான் எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.
அதற்குள், மஞ்சள் நீரில் கையை விட்டால் ஒட்டுமொத்த பரிகார பூஜையும் பலனிக்காமல் போய்விடும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். பின்னர், மாலை வரை காத்திருந்த கோமளவள்ளி, இருள்சூழ்ந்த நேரத்தில் பாத்திரத்திற்குள் கையை விட்டுள்ளார். உள்ளே அலசி அலசி தேடியபோதும் கம்மலும், மோதிரமும் கையில் சிக்கவில்லை. அப்போதுதான் செய்வினை என்ற பெயரில் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். பின்னர், இது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் புதுச்சேரி ரயில் நிலையம் அருகே 2 பேர் காவி உடையில் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூரை சேர்ந்த 30 வயதான சின்னராசு மற்றும் 30 வயதான மைக்கேல் என்பது தெரியவந்தது. ஜோதிடர் என்ற போர்வையில் போலி சாமியாராக உலாவி செய்வினை நீக்குவதாக கூறி மோசடி செய்தது அம்பலமானது. குறிப்பாக, தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நூதன மோசடியை அரங்கேற்றியதும் தெரியவந்தது.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செய்வினை நீக்குவதாக கூறி போங்காட்டம் ஆடிய போலி சாமியார்கள், நகை மற்றும் பணத்தை சுருட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Puducherry (Pondicherry)
புதுச்சேரி: பெண்ணிடம் நகை, பணத்தை சுருட்டிய போலி சாமியார்கள்… செய்வினை நீக்குவதாக கூறி போங்காட்டம்…


