Last Updated:
முறை தவறிய உறவுக்கு தடையாக இருந்த ரகசிய காதலனின் மனைவி மற்றும் அவரின் 6 மாத குழந்தை மீது இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் தெலங்கானா மக்களை பதைபதைக்க வைத்துள்ளது.
தெலங்கானாவில் 6 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. பெண்ணின் கணவரைக் கவர, அவரது ரகசிய காதலி செய்த கொடூர செயலின் பின்னணி என்ன?
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கேதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ். இவருக்கு மமதா என்ற பெண்ணுடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு 6 மாத கைக்குழந்தை உட்பட இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நாகேஷுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணுடன் முறை தவறிய உறவு இருந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமும் நடந்துள்ளது. அவருக்கு, திருமணம் ஆவதற்கு முன்பே நாகேஷுடன் பழகி வந்துள்ளார்.
இது, நாகேஷின் மனைவி மமதாவுக்கு தாமதமாக தெரியவந்துள்ளது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், குடும்பத்தினர் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. இதையடுத்து, தனது ரகசிய காதலி சுஜாதாவை சந்திப்பதை நாகேஷ் நிறுத்தியுள்ளார். அதை பொறுத்துக்கொள்ள முடியாத சுஜாதா, அடுத்தவரின் கணவரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துடித்துள்ளார். அதற்கு தடையாக இருந்த மமதாவை தீர்த்துக்கட்டவும் சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
உரிய சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த சுஜாதா, தனது வீட்டிலிருந்து பெட்ரோல், கத்தி, மிளகாய்த்தூள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நாகேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பு அமர்ந்திருந்த மமதா தனது கைக்குழந்தையை பசியமர்த்திக் கொண்டிருந்தார். இதுதான் சரியான நேரம் என முடிவு செய்த சுஜாதா, பின்னால் இருந்து மமதா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அதை சற்றும் எதிர்பாராத மமதா, தனது குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தூக்கி வீசியுள்ளார்.
ஆனால், மமதாவின் உடல் முழுவதும் தீப்பற்றியதால் வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள், உடலின் பெரும்பகுதியில் தீப்பற்றி படுகாயமடைந்த மமதா, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட 6 மாத குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கைக்குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.
முறை தவறிய உறவுக்கு தடையாக இருந்த ரகசிய காதலனின் மனைவி மற்றும் அவரின் 6 மாத குழந்தை மீது இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை பதைபதைக்க வைத்துள்ளது.
தெலங்கானா: ரகசிய காதலனின் மனைவி மற்றும் 6 மாத குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரப் பெண்… முறை தவறிய உறவுக்கு தடையாக இருந்ததால் ஆத்திரம்…


