78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையிலுள்ள 49 கைதிகள் புதன்கிழமை (04) அன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க, சிறைக்கதிகளுக்கு இந்த விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சில விதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் தலா ஒரு வார கால மன்னிப்பு வழங்கப்படவுள்ளதுடன், 75,000 ரூபாவிற்கும் குறைவான அபராதப் பணத்தைச் செலுத்தத் தவறியமைக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனைக் காலத்தை இரத்து செய்வதும் இந்த நிபந்தனைகளுள் அடங்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

