Last Updated:
நிர்மலா சீதாராமன், நியூஸ் 18-க்கு நேர்காணலில், விஜய் அரசியல் வருகை திமுகவுக்கு பாதிப்பு, காங்கிரஸ் நிலை, பாஜக வளர்ச்சி, 40 ஆயிரம் கோடி நிதி குறித்து பேசினார்.
விஜயின் அரசியல் வருகையால் திமுகவுக்குதான் பாதிப்பு என தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். நியூஸ் 18-க்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து மனம் திறந்தார்.
நியூஸ் 18-க்கு பிரத்யேக நேர்காணல் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டு அரசியல் குறித்த நியூஸ் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷியின் பல்வேறு கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பதில் அளித்தார். அதன்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றுமொரு ஆரிய – திராவிட போர் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் காங்கிரஸ் எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பியதுடன், பாஜக வளர்ந்து வருவதாகவும் கூறினார். விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், தவெக வருகை குறித்து ஆளும் திமுகதான் கவலைப்பட வேண்டும் என்றார்.
தவெக – காங்கிரஸ் கூட்டணி வாய்ப்புகள் குறித்தும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். விஜய் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், அதை தேர்தல்தான் முடிவு செய்யும் என்றார்.
மின்னணு துறைக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அத்துறை சார்ந்த தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இல்லையா என வினவினார். உலக அளவில் இருக்கும் பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் இருப்பதாக குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 8 சதவீத உள்நாட்டு உற்பத்தி என்பதை தக்கவைக்க மத்திய அரசின் கொள்கைகள் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.


