Last Updated:
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அவரை மதிக்கிறேன், அவரது கருத்துகளைக் கவனத்தில் கொள்ள விரும்புகிறேன்
மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரம் இன்றி விமர்சிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய பட்ஜெட் 2026-27 நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்தவகையில் மத்திய பட்ஜெட்டை தொடர்ச்சியாக 9 ஆவது முறையாக தாக்கல் செய்து சாதனை ஏற்படுத்தினார் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பின் முதன் முறையாக நியூஸ் 18-ககு பிரத்யேக நேர்காணலை அவர் அளித்துள்ளார்.
நிதியமைச்சரிடம் நியூஸ் 18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷி எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-
உலகம் இதுவரை கண்டிராத அளவிலான பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சுங்க வரிப் போர்கள், நாடுகள் இடையிலான மோதல்கள் மற்றும் நிலையற்ற சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பாக வழிநடத்த ‘நிலையான தன்மை’ மிக அவசியம். அதற்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அவரை மதிக்கிறேன், அவரது கருத்துகளைக் கவனத்தில் கொள்ள விரும்புகிறேன். ஆனால், அவர் பெரும்பாலும் எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார்.
இந்தியாவில் இருந்துகொண்டு, நாடாளுமன்றத்தில் அமர்ந்துகொண்டு, இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டதாகச் சொல்வது அவரது நிலையைத் தரக்குறைவாகக் காட்டுகிறது
எந்தத் துறையில் மாற்றம் தேவை என்று ராகுல் காந்தி கூறுகிறார் என எனக்குத் தெரியவில்லை. இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் மிகவும் வலுவாக உள்ளன என்று தெரிவித்தார்.


