Last Updated:
மேற்குவங்கத்தில் 58 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கம் குறித்து மம்தா பானர்ஜி, ஞானேஷ் குமாரை சந்தித்து தேர்தல் ஆணையர் மீது கடும் விமர்சனம் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது.
அந்தவகையில், மேற்குவங்கம் மாநிலத்தில் சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இறப்பு, இடப்பெயர்வு, கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்காதவர்கள் என மொத்தம் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதில் உயிரோடு இருக்கும் பலரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூறி இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இன்று சந்தித்து முறையிட்டார். இதற்காக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் 15 பேர் கொண்ட குழு இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்தித்தனர்.
#WATCH | Delhi: West Bengal CM Mamata Banerjee comes out of the Election Commission Office in Delhi.
She says, “I am very sad. I have been involved in politics in Delhi for a very long time. I was a minister 4 times and an MP 7 times. I have never seen such an Election… pic.twitter.com/2LayXFCfzy— ANI (@ANI) February 2, 2026
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “நான் டெல்லி அரசியலில் நெடுங்காலம் பயணித்திருக்கிறேன். நான்கு முறை மத்திய அமைச்சராகவும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன். ஆனால், இவ்வளவு ஆணவம் பிடித்த, பொய் பேசும் ஒரு தேர்தல் ஆணையரை நான் இதுவரை பார்த்ததில்லை.
யாருக்கும் எந்தப் பதவியும் நிரந்தரமல்ல என்பதால், நான் உங்கள் பதவியை மதிக்கிறேன் என்றும், ஒரு நாள் நீங்களும் மாறத்தான் வேண்டும் என்றும் அவரிடம் (தேர்தல் ஆணையர்) தெரிவித்தேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக தேர்தல் ஆணையரைச் சந்திக்கும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “உயிரோடு இருக்கும் பலர் இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு பெயர் நீக்கப்பட்ட பல குடும்ப உறுப்பினர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாங்கள் வரும்போது டெல்லி பயப்படுகிறது. நாங்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கான மக்களை இங்கே கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், சிறப்பு தீவிர திருத்தத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 50 பேரை நாங்கள் இங்கே அழைத்து வந்துள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.


