Last Updated:
ராகுல் காந்தி கைலாஷ் மலைப்பகுதியில் சீன ஊடுருவல் குறித்து மக்களவையில் பேச முயன்ற போது, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்திய எல்லையின் கைலாஷ் மலைப்பகுதியில் நடந்தது நாட்டு மக்களுக்கு தெரியக்கூடாது என ஏன் நினைக்கிறீர்கள் என மக்களவையில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கைலாஷ் மலைப்பகுதியில் சீனாவின் ஊடுருவல் குறித்தும், முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே நாவலில் எழுதியுள்ளதாக நாளிதழில் வெளியான கட்டுரை குறித்தும் பேச முயன்றார்.
அப்போது, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி பேச மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளிதழ்களில் வெளியாகும் தகவல்களை உண்மை எனக் கூற முடியாது என்றார்.
தொடர்ந்து ராகுல் காந்தி பேச முயன்ற போது, அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக கூறி இந்தியா கூட்டணி கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அதன்பின் அவையில் பேசிய ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதி நரவனேவின் கருத்துகள் அடங்கிய நாளிதழை படிக்க அனுமதிக்காவிட்டால் அதில் உள்ள கருத்துகளை கூறுவதாக தெரிவித்தார். அதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு ராகுல் காந்தி பேச வேண்டும் அப்படி இல்லையெனில் அடுத்த உறுப்பினரை அழைக்கிறேன் என தெரிவித்து சபாநாயகர் ஓம் பிர்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை பேச அழைத்தார். ஆனால் அகிலேஷ் யாதவ் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.


