Last Updated:
பாகிஸ்தான் அரசு T20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுத்தது; ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருக்கிறது.
டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை விவகாரத்தில் நீண்டகால தாக்கத்தை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான முடிவெடுக்கும் என நம்புவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. வங்கதேசத்திற்கு ஆதரவாக, இந்தியாவிற்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்புக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐசிசி, டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஐ.சி.சி.யின் முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ளது. தேசிய கொள்கை சார்ந்த விஷயங்களில் அந்தந்த அரசுகளின் நிலைப்பாட்டை மதிப்பதாகக் கூறியுள்ள ஐசிசி, அதேவேளையில் பாகிஸ்தான் அரசின் முடிவு ரசிகர்களின் நலன் சார்ந்ததாக இல்லை எனத் தெரிவித்துள்ளது.
மறுபுறம், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி திட்டமிட்டபடி இலங்கை சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டால் பாகிஸ்தான் விளையாட மறுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை பாகிஸ்தான் இப்போட்டியில் பங்கேற்காவிட்டால் இந்திய அணிக்கு விளையாடாமலேயே இரண்டு புள்ளிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


