காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என காசாவில் உள்ள மருத்துவமனைகள் தெரிவித்தன. இது ஒக்டோபர் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக உயர்ந்த உயிரிழப்புகளில் ஒன்றாகும்.
இந்தத் தாக்குதல்கள் காசா முழுவதும் உள்ள இடங்களில் நடந்துள்ளது. கான் யூனிஸில் உள்ள முகாமில் நடந்த தாக்குதல் தீ விபத்தை ஏற்படுத்தியதாகவும், இதில் ஒரு தந்தை, அவரது மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர் என நாசர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
காசா நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் மீதான தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களின் அத்தை மற்றும் பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டனர் என ஷிஃபா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அதேபோல பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் நான்கு பெண் போலீஸார், பொதுமக்கள் மற்றும் கைதிகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர் என ஷிஃபா மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமுக்கு கிழக்குப் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என ஷிஃபா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
காசாவின் தென்கோடி நகரமான ரஃபாவில் எகிப்துடனான எல்லைப்பகுதி இன்று திறக்கப்படவுள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. பெரும்பாலான மருத்துவ உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்ட காசாவுக்கு வெளியே சிகிச்சை தேவைப்படும் பாலஸ்தீனியர்கள் ரஃபாவை ஒரு உயிர்நாடியாக பார்க்கின்றனர்.
போர்நிறுத்தத்தின் மத்தியஸ்தர்களில் ஒருவரான எகிப்து, தனது அறிக்கையில் இஸ்ரேலியத் தாக்குதல்களை மிகக் கடுமையாக கண்டித்ததுடன், இந்த தாக்குதல்கள் போர்நிறுத்தத்தின் அரசியல் போக்கிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கின்றன என்றும் எச்சரித்தது. (a)


