சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் ஜெயராம். சென்னையில் உள்ள நடிகரின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்ட சபரிமலை தங்க கவசங்கள், மாயமான தங்கத் தகடு எப்படி நடிகரின் சென்னை வீட்டிற்கு வந்தது? முறைகேட்டில் ஜெயராமிற்கும் தொடர்பு உண்டா? சிறப்பு விசாரணைக் குழுவில் ஜெயராம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் என்ன?
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறை கதவுகள் மற்றும் துவார பாலகர் சிலைகளின் 42 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட தங்க முலாம் பூசிய கவசங்கள் கடந்த 2019ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அப்போது, அந்த தங்கக் கவசங்கள் முறையாகக் கையாளப்படாமல், செம்புத் தகடுகள் என தவறாகக் கணக்குக் காட்டப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக பகீர் தகவல்கள் கசிந்தன.
பராமரிப்பு பணிக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அந்த கவசங்களை ஒப்படைத்தபோது அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதைச் செப்பனிட்ட பிறகு சென்னை நிறுவனத்தால் மீண்டும் ஒப்படைக்கப்பட்டபோது அதன் எடை 38.26 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது 4.54 கிலோ தங்கம் மாயமானது. இந்த பகீர் சம்பவம் குறித்து கோயிலை நிர்வகித்துவரும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு போலீசில் புகார் அளித்தது. ஐயப்பனின் நகை திருட்டா? என்னதான் நடக்கிறது சபரிமலையில்? இப்படி கேரளா மட்டுமல்லாது நாடே கேள்வி எழுப்பியது.
அதனால் இவ்விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. அதன்படி சூடுபிடித்த வழக்கில் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், தங்கக் கவசங்களின் புதுப்பித்தல் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரு தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர்கள் இருவர் உள்பட 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சபரிமலை கோயிலின் தலைமை அர்ச்சகரான கண்டரரு ராஜீவரரும் கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி, கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் கோவர்தன் உள்ளிட்டோருக்கும் செக் வைக்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மொத்தம், 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் சபரிமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கத் தகடுகள் சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து, பூஜை செய்யப்பட்டதற்காக சில புகைப்படங்கள் அதிகாரிகளிடம் சிக்கின.
முறைகேடில் அவருக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு ஜெயராமை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். சென்னை அசோக் நகரில் இருக்கும் ஜெயராம் இல்லத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக தான் சபரிமலைக்குச் சென்று வருவதால் உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் பழக்கம் ஏற்பட்டதாக நடிகர் ஜெயராம் தெரிவித்தார்.
உண்ணியை மிகவும் நம்பியதால், தனது வீட்டிற்குப் பலமுறை அவர் வந்து செல்ல அனுமதித்ததாகவும், சபரிமலை தங்கத் தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் என கூறியதாலே அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
இதனால், சபரிமலை தங்கத் தகடு முறைகேடு வழக்கில் நடிகர் ஜெயராமை, விசாரணை வளையம் இறுக்கியிருப்பது கேரள திரைத்துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

