Last Updated:
அஜித் பவார் மரணத்துக்குப் பிறகு, சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்.
மறைந்த அஜித் பவாரின் மனைவியும், எம்.பி.யுமான சுனேத்ரா பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கபடவுள்ளார். தொடர்ந்து, அவர் மகாராஷ்டிர துணை முதலமைச்சராக இன்று பதவியேற்க வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சருமான அஜித் பவாரின் மரணம், அவரது மனைவி சுனேத்ரா பவாரை திடீரென மகாராஷ்டிரா அரசியலின் மையமாக மாற்றியுள்ளது. கடந்த 28ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் நிகழ்ந்த விமான விபத்தில் துணை முதலமைச்சரான அஜித்பவார் அகால மரணமடைந்தார். பாராமதியில் முக்கிய தலைவர்கள், லட்சக்கணகான தொண்டர்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அஜித்பவார் மரணத்தை அடுத்து கட்சியிலும், ஆட்சியிலும் அவரது இடத்தை யார் நிரப்புவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவாரைச் சந்தித்துப் பேசினர். சுனேத்ரா பவாருக்கு கட்சியில் பெரிய பங்கு வழங்கி, மாநில அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று கட்சியினர் பகிரங்கமாக பேசத் தொடங்கினர்.
மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களில் சிலர், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்து, அவரது தலைமையிலான அமைச்சரவையில், அஜித் பவாரின் வாரிசாக சுனேத்ராவை நியமிக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஆளும் கூட்டணியான மகாயுதிக்கு தலைமை தாங்கும் பாஜக, மறைந்த அஜித் பவாரின் குடும்பத்தினரும் கட்சியும் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஆதரிக்கும் என்று கூறினார்.
இதையடுத்து, இன்று மும்பையில் கட்சியின் சட்டமன்றக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்றக் கட்சித் தலைவராக சுனேத்ரா பவார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மூத்த தலைவரும் அமைச்சருமான அமைச்சர் சகன் புஜ்பால் கூறினார். தொடர்ந்து மக்கள் பவனில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், மாநில அமைச்சராக சுனேத்ரா பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கிறார். அவருக்கு தனது கணவர் கவனித்த மாநில விளையாட்டுத்துறை ஒதுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. நிதித் துறை தற்போது முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் செல்லலாம். இதன் தொடர்ச்சியாக அவர் சுனேத்ரா துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழல் சுனேத்ரா பவார் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பதம்சிங் பாஜிராவ் பாட்டீலின் மகளான சுனேத்ரா பலமான அரசியல் குடும்பத்தை சார்ந்தவர் என்றாலும், பின்னணியில் இருந்து சேவை செய்வதையே விரும்பினார். 2024 மக்களவைத் தேர்தலில் பாராமதியில் உறவினரான சுப்ரியா சுலேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனாலும் அதே ஆண்டில் அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேரடி தேர்தல் அரசியலில் நீண்ட அனுபவம் இல்லாவிட்டாலும், அவரது சமூக அனுபவமும் அரசியல் புரிதலும் அவரை இந்த பொறுப்புக்கு தகுதியானவராக மாற்றியுள்ளன.
மகாராஷ்டிராவில் 1978 ஆம் ஆண்டு முதன்முதலில் துணை முதலமைச்சர் பதவி உருவாக்கப்பட்டதில் இருந்து, இந்த பதவியை ஏற்கவிருக்கும் முதல் பெண்மணி சுனேத்ரா பவார் ஆவார்.
Jan 31, 2026 10:31 AM IST


