கோலாலம்பூர், ஜனவரி 30:
பழைய கார்களை அகற்றிவிட்டு, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய வாகனங்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் ‘ஈடுசெய் மானியத் திட்டத்துடன்’ (Matching Grant Programme) புரோட்டான் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
அரசாங்கம் வழங்கும் 2,000 ரிங்கிட் மானியத்துடன், புரோட்டான் நிறுவனம் வழங்கும் கூடுதல் ஊக்கத்தொகையும் சேர்ந்து வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது:
புரோட்டான் சாகா (Saga) & e.MAS 5 ஆகியமாடல்களை வாங்குபவர்களுக்கு புரோட்டான் சார்பில் RM1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். அரசாங்க மானியமான RM2,000-உடன் சேர்த்து மொத்தம் RM3,000 வரை சலுகை கிடைக்கும்.
அதே நேரம் புரோட்டான் X50, X70 & e.MAS 7 போன்ற இந்த நவீன மாடல்களைத் தேர்வு செய்வோருக்கு புரோட்டான் சார்பில் RM2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். அரசாங்க மானியத்தையும் சேர்த்தால் மொத்தம் RM4,000 வரை தள்ளுபடி பெறலாம்.
இந்தச் சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொடுக்கும் (Trade-in) பழைய கார் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பழமையானதாக இருக்க வேண்டும்.
புரோட்டானின் அனைத்து மாடல்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
சாலையில் ஓடும் மிகவும் பழமையான கார்களின் எண்ணிக்கையைக் குறைத்து, எரிபொருள் சிக்கனம் கொண்ட மற்றும் பாதுகாப்பான கார்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். மேலும், 2026-ஆம் ஆண்டில் 2,00,000 வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற புரோட்டான் நிறுவனத்தின் இலக்கிற்கும் இத்திட்டம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




