கோலா திரெங்கானு, ஜனவரி 30:
இங்குள்ள கம்போங் சிம்பாங் தோக் கூ (Kampung Simpang Tok Ku) பகுதியில் அமைந்துள்ள இரண்டு அடுக்கு டோய்ஸ் மற்றும் மிதிவண்டி கடை ஒன்றில் நேற்று இரவு 7.40 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
கடை மேலாளர் மாயா சுஹைடி (40) கூறுகையில், “நானும் ஊழியர்களும் கடையின் உள்ளே இருந்தபோது, கடையின் பின்புறத்திலிருந்து அடர்ந்த புகை வருவதைக் கண்டோம். உடனடியாaக ஊழியர்களை வெளியேற உத்தரவிட்டேன். கடையின் வெளிப்புறத்தில் இருந்த ஒரு சில பொருட்களைத் தவிர மற்ற எதையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை,” என கண்ணீருடன் தெரிவித்தார்.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான 500-க்கும் மேற்பட்ட மிதிவண்டிகள், 10-க்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், ரிமோட் கார் பொம்மைகள், பள்ளி உபகரணங்கள் மற்றும் இதர விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை உட்பட இந்தத் தீ விபத்தில் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் அழிந்துள்ளன.
மேலும் அன்றைய தின விற்பனைப் பணமான சுமார் 10,000 ரிங்கிட் ரொக்கமும் தீயில் கருகியது.
கோலா திரங்கானு தீயணைப்பு நிலையத் தலைவர் தொய்பா தாயிப் கூறுகையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீ அருகிலுள்ள மற்ற கட்டிடங்களுக்குப் பரவாமல் தடுத்ததாகத் தெரிவித்தார். தீ விபத்திற்கான உண்மையான காரணம் மற்றும் துல்லியமான சேத விபரங்கள் குறித்து தற்போது புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.a




