Last Updated:
ஒரு வீரருக்குத் தொடர்ச்சியாக 5 இன்னிங்ஸ்கள் வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அவர் பதற்றமின்றி விளையாட முடியும்
டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வலியுறுத்தியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சனின் ஆட்டம் மீது கிரிக்கெட் உலகினரின் கவனம் குவிந்துள்ளது.
இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் 3 போட்டிகளில் அவர் 10, 6 மற்றும் 0 ரன்களை எடுத்த நிலையில், 4 ஆவது போட்டியில் அவர் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி தொடரை வென்றதால் சஞ்சு சாம்சனின் ஆட்டம் பெரிய அளவில் விமர்சிக்கப்படவில்லை. இருப்பினும், அவர் இன்னும் தன்னை தயார்படுத்த வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான முகமது கைஃப் கூறியதாவது- இந்தியா ஏற்கனவே தொடரை வென்றுவிட்டது. எனவே அவசரமாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மீதமுள்ள போட்டிகளிலும் சஞ்சுவை விளையாட விடுங்கள். அதன்பிறகு உலகக்கோப்பை குறித்துத் தீர்மானிக்கலாம்.
சஞ்சு சாம்சன் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் 3 சதங்கள் அடித்துத் தனது திறமையை நிரூபித்தவர். சில போட்டிகளில் ரன் எடுக்கவில்லை என்பதற்காக அவரைத் தூக்கி எறியக்கூடாது.
Jan 29, 2026 10:29 PM IST


