கோலாலம்பூர், ஜனவரி 29:
அறியாத வயதில் செய்த சிறு தவற்றால் 13 ஆண்டுகளைச் சிறையிலேயே கழித்துவிட்ட இரண்டு மலேசியப் பெண்கள், தங்களுக்குக் கருணை காட்டக் கோரி மலேசிய உள்துறை அமைச்சரிடம் உருக்கமான மேல்முறையீடு செய்துள்ளனர்.
கடந்த 2013-ஆம் ஆண்டு, ஜப்பான் சுற்றுலா செல்வதற்காக ‘மாதவன்’ என்ற முகவரை இந்தப் பெண்கள் அணுகியுள்ளனர். அப்போது அவர் கொடுத்த பையில் போதைப்பொருள் இருந்தது தெரியாமல் ஈரான் வழியாகப் பயணித்தபோது, தலைநகர் தெஹ்ரானில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்நாட்டு நீதிமன்றம் அவர்களுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
கைது செய்யப்பட்ட போது, அவர்களில் ஒருவருக்கு வயது வெறும் 14 மட்டுமே! மற்றவர் அவருக்கு உறவினரான 47 வயது பெண்மணி ஆவார்.
இது குறித்து அவர்களின் வழக்கறிஞர் மனோகரன் கூறுகையில்: “2019-ஆம் ஆண்டு சர்வதேச கைதிகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், 102 ஈரானியக் கைதிகளுக்குப் பதிலாக இவர்கள் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்” என்றார்.
சர்வதேச கைதிகள் பரிமாற்றச் சட்டத்தின் பிரிவு 18(A)-வின் படி, மாற்றப்படும் கைதிகளுக்கு பிணை (Bail), பொது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு பெறுவதற்கான முழு உரிமை உண்டு.
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் அந்த இளம் பெண்ணுக்கு இப்போது வயது 26. அவரது வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடியாகப் பிணை வழங்க வேண்டும்.
தற்போது இந்த விவகாரம் மலேசிய உள்துறை அமைச்சரின் கவனத்திற்குச் சென்றுள்ள நிலையில், நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்த பெண்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




