கோலாலம்பூர்:
கடந்த 2024-ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய வரி ரீஃபண்ட் தொகை 14.6 பில்லியனில் இருந்து 33.3 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாக ரபிஸி சுட்டிக்காட்டினார். அரசு தனது உண்மையான வருமானத்தைக் கூடுதலாகக் காட்டுகிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அதாவது, திருப்பிச் செலுத்த வேண்டிய 33 பில்லியன் ரிங்கிட்டையும் வருமானமாக கணக்கு காட்டியுள்ளதால், அரசின் நிதிப்பற்றாக்குறை (Fiscal Deficit) தவறாகச் சித்தரிக்கப்படலாம் என அவர் எச்சரித்தார்.
அதிகாரப்பூர்வமாக 4.1% எனச் சொல்லப்படும் நிதிப்பற்றாக்குறை, இந்த நிலுவைத் தொகையைக் கழித்தால் உண்மையில் 5.8% முதல் 6% வரை இருக்கக்கூடும் என்று அவர் கணக்கிட்டுக் கூறினார்.
“அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட வரி ஏன் இன்னும் மக்களுக்குத் திரும்ப வழங்கப்படவில்லை? நிர்வாகக் குறைபாடா அல்லது நிதிநிலையை வலுவாகக் காட்ட அரசு திட்டமிட்டுத் தாமதிக்கிறதா?” என ரபிஸி வினவினார்.
பணப்பரிமாற்றக் கணக்கியல் (Cash Accounting) முறையைப் பயன்படுத்தி அரசு உண்மையை மறைக்காமல், நிதி அமைச்சகம் இது குறித்து வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




