Last Updated:
ஆந்திராவில் காதலனின் மனைவிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தைச் செலுத்தி, முன்னாள் காதலி கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திராவில் முன்னாள் காதலனின் மனைவிக்கு எச்.ஐ.வி. வைரஸ் ஊசி செலுத்திய பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி. தொற்று பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து திட்டமிட்டு பழிவாங்கிய கொடூரச் செயலில் நடந்தது என்ன?
காதலனின் மனைவிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தைச் செலுத்தி, முன்னாள் காதலி கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். அப்பாவிப் பெண்ணை விபத்தில் சிக்க வைத்து ஆட்டோவில் ஏற்றியவர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நடுவழியில் எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் பெண்ணின் உடலில் செலுத்தி உள்ளனர். காதலனைப் பழிவாங்க அவரது மனைவிக்கு கொடிய நோயைப் பரப்பி, குழிதோண்டிய பெண் யார்? நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் 34 வயதான வசுந்தரா. கருத்து வேறுபாடால் இவரை விட்டுப் பிரிந்த முன்னாள் காதலர், வேறொரு பெண்ணை மணந்துள்ளார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத வசுந்தரா, “தனக்குக் கிடைக்காத காதலன் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது” என நினைத்து, எப்படியாவது அவரை மனைவியிடமிருந்து பிரித்துவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டியுள்ளார். அதற்காகக் கொடூரத் திட்டம் ஒன்றைப் போட்டவர் தனது தோழியான செவிலியர் கோங்கே ஜோதி மற்றும் அவருடைய இரண்டு மகன்களுடன் கூட்டு சேர்ந்து சதித்திட்டம் தீட்டி உள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முன்னாள் காதலனின் மனைவி ஜனவரி 9ஆம் தேதி, மதிய உணவிற்காக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது மூன்று பேருடன் சேர்ந்து சதி செய்து சாலை விபத்தை ஏற்படுத்திய வசுந்தரா, காதலனின் மனைவியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். ஆனால், போகும் வழியில் தயாராக எடுத்து வந்திருந்த எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் அவருக்குச் செலுத்தி உள்ளார். பின்னர், அவரை பாதி வழியில் இறக்கவிட்டவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
சிறிது நாட்களில் மனைவியின் உடல்நிலை மோசமாக மருத்துவ சிகிச்சையில் சம்பவம் குறித்து தெரியவர ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அரண்டு போனார்கள். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வசுந்தராவின் சதி வேலை சிசிடிவி காட்சி பதிவுகளுடன் போலீசாரிடம் சிக்கியது. உடனே அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வசுந்தரா உள்பட நான்கு பேரை கைது செய்தனர்.
இதனை அடுத்து வசுந்தரா உள்ளிட்ட 4 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
ஆந்திரா: முன்னாள் காதலனின் மனைவிக்கு எச்.ஐ.வி. ஊசி செலுத்திய பெண்…! கொடூரச் செயலில் நடந்தது என்ன…?


