கோலாலம்பூர்:
மலேசியாவில் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 16 ஆக நிர்ணயிக்கும் புதிய விதிமுறை, இந்த ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கூலாய் பகுதியில் நடைபெற்ற பள்ளி ஆரம்பக்கால உதவித் தொகை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, துணைத் தகவல் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் இது குறித்து விளக்கமளித்தார்:
இந்த நடவடிக்கை ‘ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின்’ கீழ் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இது ‘ரெகுலேட்டரி சேண்ட்பாக்ஸ்’ (Regulatory Sandbox) எனும் சோதனை கட்டத்தில் உள்ளது.
சமூக ஊடக நிறுவனங்களுடன் இணைந்து, பயனர்களின் வயதை எவ்வாறு பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் சரிபார்ப்பது (Age Verification) என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
ஏற்கனவே தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்சில் ஏற்கனவே அறிவித்தபடி, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் (ஜூலை முதல்) இவ்விதிமுறை நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு இறுதிக்குள், அனைத்து சமூக ஊடகத் தளங்களும் டிஜிட்டல் பயனர் அடையாளச் சரிபார்ப்பு (eKYC) முறையை அமல்படுத்த வேண்டும் என்பது அரசின் இலக்காகும். இதன் மூலம் போலி கணக்குகள் மற்றும் சிறுவர்கள் கணக்கு தொடங்குவது கட்டுப்படுத்தப்படும் என்றார்.




