Last Updated:
கலை, கல்வி, மருத்துவம், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, பொதுச் சேவை மற்றும் சமூகப் பணி போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இவை வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசன் உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக, பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பத்ம விருதுகள். கலை, கல்வி, மருத்துவம், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, பொதுச் சேவை மற்றும் சமூகப் பணி போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இவை வழங்கப்படுகின்றன.
இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதாக பத்ம விபூஷண் விருதும், மூன்றாவது உயரிய விருதாக பத்ம பூஷண் விருதும், நான்காவது உயரிய விருதாக பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படுகின்றன. பிரதமர் அமைக்கும் ‘பத்ம விருதுகள் குழு’ பரிந்துரையின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களும் தங்களுக்குத் தெரிந்த சாதனையாளர்களை இந்த விருதுகளுக்குப் பரிந்துரைக்க முடியும். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை (ஜனவரி 26) முன்னிட்டு இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டின் நீலகிரியைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவச்சலத்துக்கும் பத்ம ஸ்ரீ விருதும், சேலத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர் என்பவருக்கும் பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்ப கலைஞர் கே.பழனிவேல் என்பவருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai,Tamil Nadu


