கோலாலம்பூர்:
இடுப்பு எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 6-ஆம் தேதி, தமது இல்லத்தில் தவறி விழுந்ததில் துன் மகாதீருக்கு வலது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. 100 வயதைக் கடந்த மூத்த அரசியல் தலைவரான அவர், உடனடியாக கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய நிறுவனத்தில் (IJN) அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவரது உதவியாளர் சுஃபி யுசோஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துன் மகாதீருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றும், கடந்த 14 நாட்களாக வழங்கப்பட்டு வரும் சிகிச்சையின் விளைவாக, அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மருத்துவ நிபுணர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.
வயது முதிர்வைக் கருத்தில் கொண்டு, அவர் முழுமையாகக் குணமடைய இன்னும் கூடுதல் காலம் எடுக்கும் என்பதால், இந்த பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, துன் மகாதீர் தற்போது போதிய ஓய்வு எடுப்பது அவசியமாகும். எனவே, அவரைச் சந்திக்க உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமது உடல்நிலை குறித்து அக்கறை காட்டியதோடு, அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைத்து பொதுமக்களுக்கும் துன் மகாதீரும் அவரது குடும்பத்தினரும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
The post துன் மகாதீர் உடல்நிலை: திருப்திகரமான முன்னேற்றம் – ஐ.ஜே.என் மருத்துவமனை தகவல் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

