தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை வேகமாகவும், எளிதாகவும் மாற்றி வருகிறது. வங்கிச் சேவைகள், பணம் பரிமாற்றம், ஆன்லைன் கட்டணங்கள் என பல விஷயங்கள் இன்று சில நிமிடங்களில் அதுவும் விரல் நுனியில் முடியும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளன. அந்த வரிசையில், தங்கம் விற்பதும் இப்போது ஏடிஎம் மூலம் செய்யக்கூடிய எளிய சேவையாக மாறியுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையிலான தங்க ஏடிஎம் ஒன்று தெலங்கானாவின் ஐதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் மூலம், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய தங்கத்தை விற்று, 30 நிமிடங்களுக்குள் பணத்தை நேரடியாக தங்களது வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ள முடியும்.
ஃபின்டெக் நிறுவனமான கோல்ட்சிக்கா இந்த ஏஐ மூலம் இயங்கும் தங்க ஏடிஎம்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், நகைக் கடைக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமோ, வியாபாரிகளுடன் பேரம் பேச வேண்டிய சிரமமோ இன்றி, உடனடியாக பணத்தை பெற விரும்பும் மக்களுக்கு இந்த வசதி உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில், தங்கத்தை விற்க நினைக்கும் வாடிக்கையாளர்கள், அதன் தூய்மையைச் சரிபார்க்கவும், எடையை மதிப்பிடவும், விலையை நிர்ணயிக்கவும் பல மணி நேரங்களை செலவிட வேண்டிய நிலை இருந்தது. ஆனால், ஏஐ அடிப்படையிலான இந்த தங்க ஏடிஎம், அனைத்து விதமான சிரமங்களையும் போக்கி, ஒரே இடத்தில், குறுகிய நேரத்தில் நமது தேவையை தீர்த்து வைக்கிறது.

இந்த தங்க ஏடிஎம் மூலம், தங்கத்தை பணமாக மாற்றுவதற்கு அதிகபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே செலவாகும். முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தின் மூலமே செயல்படும் இந்த ஏடிஎம், வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை உறுதி செய்கிறது.
இது எப்படி செயல்படுகிறது?
- தங்கம் உருக்குதல்: வாடிக்கையாளர் தங்களின் பழைய தங்கத்தை இயந்திரத்திற்குள் வைத்தவுடன், அது உடனடியாக உருக்கும் செயல்முறையைத் தொடங்குகிறது.
- ஏஐ அடிப்படையிலான தூய்மைச் சரிபார்ப்பு: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், தங்கத்தின் தூய்மை மற்றும் எடை மனிதர்களின் தலையீடு இல்லாமல் துல்லியமாக மதிப்பிடப்படுகிறது.
- உடனடி பணம் செலுத்துதல்: தங்கத்தின் தரம் மற்றும் தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் தங்கத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. பின்னர் இறுதித் தொகை, அரை மணி நேரத்திற்குள் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த ஏஐ தங்க ஏடிஎம், தங்கத்தை விற்பதோடு மட்டுமல்லாமல், பல கூடுதல் வசதிகளையும் வழங்குகிறது. ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (AR) தொழில்நுட்பத்தின் மூலம், பயனர்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தின் முன்பாக நின்றபடியே மெய்நிகராக நகைகளை அணிவது போல் பார்த்து தேர்வு செய்ய முடியும்.மேலும், 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்க நாணயங்களை நேரடியாக இந்த ஏடிஎம் மூலம் வாங்கும் வசதியும் உள்ளது. இந்தச் சேவை 24 மணி நேரமும், வாரம் முழுவதும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மோசடி, திருடப்பட்ட தங்கத்தின் தவறான பயன்பாடு போன்றவற்றைத் தடுக்க, இந்த தங்க ஏடிஎம் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுகிறது. எந்த பரிவர்த்தனையையும் தொடங்கும் முன், வாடிக்கையாளரின் அடையாளம் KYC நடைமுறைகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. குற்றப் பதிவுகள் உள்ளிட்ட விவரங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு கண்டறியப்பட்டால், பரிவர்த்தனை உடனடியாக நிறுத்தப்படும்.
தற்போது, கோல்ட்சிக்கா நிறுவனம் இந்தியாவில் 14 பாரம்பரிய தங்க ஏடிஎம்களையும், வெளிநாடுகளில் மூன்றையும் இயக்கி வருகிறது. அடுத்த ஒரு ஆண்டுக்குள், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 100 ஏஐ அடிப்படையிலான தங்க ஏடிஎம்களை நிறுவவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது, இந்த ஏடிஎம் இயந்திரங்கள் முழுமையான வணிக ரீதியான பயன்பாட்டிற்கான இறுதி ஒழுங்குமுறை அனுமதிகளை எதிர்நோக்கி உள்ளன.
இவ்வாறாக, இந்த ஏஐ தங்க ஏடிஎம்-இன் அறிமுகம், இந்தியாவில் தங்க விற்பனையின் போக்கையே மாற்றும் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம், பழைய தங்கத்தை விற்கும் செயல்முறையும் இனி வேகமாகவும், வெளிப்படையாகவும், நம்பகமாகவும் மாறும் என்கிற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

