கோலாலம்பூர்:
மலாக்கா மாநிலத்தின் கிராமப்புற மேம்பாடு, வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆட்சிக் குழு (Exco) உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக டாக்டர் அக்மால் சாலே அதிரடியாக அறிவித்துள்ளார்.
இவரது ராஜினாமா அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும்.
நேற்று (ஜனவரி 15, 2026) கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTC) நடைபெற்ற 2025 அம்னோ இளைஞர் அணி பொதுச் சபையில் தனது கொள்கை உரையை ஆற்றும்போது, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மலாக்கா ஆட்சிக் குழுவில் இருந்து விலகினாலும், அம்னோ இளைஞர் அணித் தலைவர் பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பார்.
அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஜசெகவுடன் (DAP) இணைந்து செயல்படுவதில் கொண்டுள்ள அதிருப்தியைப் பிரதிபலிக்கும் வகையிலேயே தான் இந்த முடிவை எடுத்ததாகக் கூறிய அவர், “பதவியை விடக் கொள்கையும், கண்ணியமுமே முக்கியம்” என்று அவர் வலியுறுத்தினார்.
ஆட்சிக் குழு உறுப்பினராக இருப்பதால் பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் ஊதியம் கிடைத்தாலும், மக்களின் கவலைகளுக்கு முன்னுரிமை அளித்து அதைத் துறக்கத் துணிந்ததாகத் தெரிவித்தார்.
இனி ஆட்சிக் குழுவில் இல்லாததால், நாடு முழுவதும் உள்ள அம்னோ இளைஞர் பிரிவினரை ஒருங்கிணைத்து, கட்சியின் கொள்கைகளுக்காகத் தீவிரமாகப் போராடப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.
The post ‘அடிமட்ட மக்களின் குரலுக்காகப் பதவியைத் துறக்கிறேன்’; அக்மால் சாலே ராஜினாமா! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

