Last Updated:
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் இரண்டு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் இரண்டு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்றது. இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாத்தில் இந்திய வெற்றி பெற்றது. 1-0 என்ற நிலையில் இரண்டாவது போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள நிராஞ்சன் ஷா மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா – சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிலையில், ரோஹித் ஷர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷூப்மன் கில் 56 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரயாஸ் ஐயர் 8 ரன்களிலும், விராட் கோலி 23 ரன்களிலும் பெவிலியன் திரும்ப, 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 24 ஓவர்களில் 120 ரன்களை சேர்ந்திருந்தது.
ரவிந்திர ஜடேஜா – கே.எல்.ராகுல் இணைந்து அணியின் ஸ்கோரை ஏற்றினர். ரவிந்திர ஜடேஜா 27 ரன்களில் நடையை கட்ட, கே.எல்,ராகுல் விளாசினார். நிதிஷ்குமார் ரெட்டி 20 ரன்களிலும், ஹர்ஷித் ராணா 8 ரன்களிலும் வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 284 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக ஆடிய கே.எல்.ராகும் 92 பந்துகளில் 112 ரன்களை குவித்தார்.
285 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஓப்பனர்களாக டெவோன் கான்வே – ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். 6-வது ஓவரை வீசிய ஹர்ஷித் ரானா 16 ரன்களில் டெவோன் கான்வே-வை வெளியேற்றினார். 13-வது ஓவரில் 10 ரன்களில் ஹென்றி நிக்கோல்ஸை வெளியேற்றினார் பிரஷித் கிருஷ்ணா.
டேரில் மிட்செல் – வில் யங் இணைந்து அணியின் ஸ்கோரை மளமளவென ஏற்றினர். இருவரையும் அவுட்டாக்க முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர். இந்த நிலையில் தான் குல்தீப் யாதவ் வீசிய 38ஆவது ஓவரில் 87 ரன்களில் வெளியேறினார் வில் யங். 96 பந்துகளில் சதமடித்து அசத்தினார் டேரில் மிட்செல். 45 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன்களை சேர்த்திருந்தது நியூசிலாந்து அணி.
இறுதியில் 47.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது நியூஸிலாந்து. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி வாகை சூடியது நியூசிலாந்து. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் 131 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். க்ளன் பிலிப்ஸ் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில், ஹர்ஷித் ராணா, பிரஷித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


