Last Updated:
உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் ஆர்த்தோபீடிக் வார்டில் எலிகள் கூட்டம் கூட்டமாக ஜாலியாக ஓடிப்பிடித்து விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எலிகளின் கூடாரமாக மாறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளின் உயிருடன் விளையாடும் எலிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
அரசு மருத்துவமனையில் ஆர்த்தோபீடிக் வார்டில் எலிகள் கூட்டம் கூட்டமாக ஜாலியாக ஓடிப்பிடித்து விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் குழாய்களில் கபடி விளையாடிய எலிகள், நோய் தொற்றைப் பரப்பும் வேலையில் இறங்கியுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா?
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோண்டாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு கோண்டா மட்டுமின்றி அந்த மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இதில், எலும்புப் பிரச்சனை, மூட்டுவலி, தசை நார்கள் மற்றும் நரம்புப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க ஆர்த்தோபீடிக் தனி வார்டு உள்ளது. இந்த வார்டில் உள் நோயாளிகளாக சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் ரொட்டி போன்றவை ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இதை உட்கொள்வதற்காக எலிகள் கூட்டம் கூட்டமாக ஆர்த்தோபீடிக் வார்டுக்கு படையெடுத்துள்ளன. இது தொடர் கதையானதால் நோயாளிகளைவிட எலிகளே, அங்கு சர்வசாதாரணமாக நடமாடுகின்றன. அதை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாததால் நோயாளிகளின் அறைகளை எலிகளே ஆக்கிரமித்துள்ளன.
எலிகளால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து மருத்துவமனை நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் எலிகளின் கூடாரமாக மாறிய அரசு மருத்துவமனை…! கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா…?


