Last Updated:
145 வழக்குகளில் வெறும் 6 பேரை மட்டும் மீண்டும் மீண்டும் சாட்சிகளாக இணைத்து மோசடி நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸார், வழக்குகளில் அரசு சாட்சிகளை சேர்ப்பதில் மோசடியில் ஈடுபட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 145 வழக்குகளில் வெறும் 6 பேரை மட்டும் மீண்டும் மீண்டும் சாட்சிகளாக இணைத்து மோசடியை அரங்கேற்றிய காவல்துறை அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
எத்தனை கேஸ் போட்டாலும் சரி இந்த 6 பேர் தான் அரசு சாட்சி. என நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக மாற்றியிருக்கிறார் இந்த போலீஸ் அதிகாரி. சுமார் 145 வழக்குகளில் போலி சாட்சிகளை வைத்து தனக்கு சாதகமாக தீர்ப்புகளைப் பெற்ற மோசடி சம்பவத்தின் பின்னணி என்ன?
மத்தியபிரதேச மாநில மௌகஞ்ச் மாவட்டத்தில் தான் இந்த மோசடி அரங்கேறியிருக்கிறது. பொதுவாக வழக்குகளில் அரசு சார்பாக சாட்சி சொல்ல யாரும் முன் வருவது இல்லை. அதுபோன்ற வழக்குகளை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேறு சில வழக்குகளில் அரசு சாட்சிகளாக இருப்பவர்களின் பெயர்களை, அவர்களுக்கே தெரியாமல் இந்த வழக்குகளில் சேர்த்துள்ளனர் போலீசார்.
லௌர் மற்றும் நைகதி காவல்நிலையங்களில் தான் இந்த மோடிச அரங்கேறியிருக்கிறது. இந்த விவகாரம் வெளியில் தெரிந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்நிலையத்தில் உள்ள டிஜிட்டல் குற்றப்பதிவேடுகளை ஆய்வு செய்திருக்கின்றனர். அதில் இரண்டு காவல்நிலையங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் வெறும் 6 பேர் தான் அரசு சாட்சிகளாக மீண்டும் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்து அதிர்ந்து போயிருக்கின்றனர்.
இந்த மோசடியை இரு காவல்நிலையங்களுக்கும் பொறுப்பு அதிகாரியாக இருந்த ஜகதீஷ் சிங் தாக்கூர் என்பவர் தான் அரங்கேற்றியிருக்கிறார். இவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து 140-க்கும் மேற்பட்ட வழக்குககளில் போலி சாட்சிகளை தன் இஷ்டத்துக்கு இணைத்து மோசடி செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. சாட்சிகளுக்கெல்லாம் அழைய முடியாது, நான் சொல்வது தான் சாட்சி, கேஸை முடிச்சுட்டு போய்ட்டே இருக்கணும். என தனக்குச் சாதகமான நபர்களை மீண்டும் மீண்டும் சாட்சிகளாக சேர்த்து சகட்டு மேனிக்கு விளையாடியிருக்கிறார் அந்த அதிகாரி.
நூற்றுக்கணக்கான வழக்குகளில் சாட்சியாகக் குறிப்பிடப்பட்ட ஆறு நபர்களில் ஒருவரான அமித் குஷ்வாஹா, போலீஸ் அதிகாரி ஜகதீஷ் சிங் தாக்கூர் எங்கெல்லாம் இடமாற்றம் செய்யப்படுகிறாரோ அங்கெல்லாம் அவருடன் சென்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டே அவர் மீது புகார் அளிக்கப்பட்டும் எந்த வித நடவக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது ஆதாரங்களுடன் அவருக்கு கிடுக்கிப்பிடிபோடப்பட்ட நிலையில், வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்.
சாட்சிகளில் ஒருவரும் காய்கறி வியாபாரியான தினேஷ் குஷ்வாஹா இது குறித்து கூறுகையில், தான் இரண்டு வழக்குகளில் மட்டுமே சாட்சியாக கையெழுத்திட்டதாகவும், மற்ற வழக்குகளில் எல்லாம் தன் பெயரை நுழைத்தது காவல்துறை அதிகாரி தாக்கூரின் கைங்கர்யம் என்றும் கூறியுள்ளார். காவல்துறை அதிகாரியின் இந்த செயல் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


