கோலாலம்பூர்:
அனைத்துலக வர்த்தக சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து முன்னேற்றத்மடைந்து வருகிறது. நேற்று (ஜனவரி 13, 2026) வர்த்தக முடிவில் ரிங்கிட்டின் மதிப்பு RM4.05 என்ற முக்கிய நிலையை எட்டியிருந்தது.
அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், அந்நாட்டின் மத்திய வங்கியான ‘பெடரல் ரிசர்வ்’ (Federal Reserve) மீது கொண்டு வரும் அழுத்தங்கள் முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வட்டி விகிதக் குறைப்பு மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான டிரம்ப் நிர்வாகத்தின் விமர்சனங்களால் டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் பலவீனமடைந்துள்ளது.
இந்நிலையில் மலேசியாவின் நிதிநிலை அறிக்கையில் (Budget 2026) மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், குறைந்து வரும் பணவீக்கம் மற்றும் நிலையான அரசியல் சூழல் ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்களை மலேசியா பக்கம் ஈர்த்துள்ளன. இது ரிங்கிட்டுக்கான தேவையை அதிகரித்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மலேசியாவின் மத்திய வங்கியான பாங்க் நெகாரா (Bank Negara) தனது வட்டி விகிதத்தை (OPR) நிலையாக வைத்திருப்பது ரிங்கிட்டிற்குச் சாதகமாக அமைந்துள்ளது.
நேற்றுக் காலை வர்த்தகம் தொடங்கியபோது டாலருக்கு எதிராக ரிங்கிட் RM 4.06 என்ற நிலையில் இருந்தது. இருப்பினும் வர்த்தக நேரத்தின் இறுதியில் அது மேலும் முன்னேறி RM 4.05 (துல்லியமாக 4.0450/0520) என்ற நிலையைத் தொட்டது.
பொருளாதார ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் பலவீனம் தொடரும் பட்சத்தில், வரும் மாதங்களில் ரிங்கிட் RM 3.93 முதல் RM 4.00 என்ற நிலையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையைக் குறைக்க உதவும், இதனால் மலேசிய மக்களின் வாழ்க்கைச் செலவு குறையக்கூடும்.




