Last Updated:
Ind vs NZ | நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று களமிறங்கவுள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்றது. அதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது அதிரடியான ஆட்டத்தால் 93 ரன்களை குவித்து நூழிலையில் சதத்தை தவறவிட்டார்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் வென்றால் 2க்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெறும் இந்திய அணி, தொடரையும் கைப்பற்றும். அதே சமயம் தொடரை தக்கவைக்க நியூசிலாந்து அணி முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் ஆயுஷ் படோனி சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த ஃபார்மில் வாஷிங்டன் சுந்தர் இருந்து வந்தார். அவரது பந்துவீச்சு பவர் பிளே ஓவர்களில் எதிரணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இந்நிலையில் அவர் அணியில் இடம் பெறாதது பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ள நிலையில் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயுஷ் படோனி அணியில் சேர்க்கப்பட்டாலும் அவரை பிளேயிங் லெவனில் எடுக்கும் வாய்ப்பு குறைவு தான். அதற்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி அணியில் விளையாட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்திய உத்தேச அணி : சுப்ன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்சித் ராணா, நிதிஸ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
இப்போட்டியில் விராட் கோலி 50 ரன்களுக்கு மேல் அடித்தால், ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 6 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே இந்திய வீரர் எனும் சாதனையைப் படைப்பார். அதேபோல இப்போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தால் அதிவிரைவாக 3000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.


