Last Updated:
காஷ்மீர் எல்லையில் பறந்த சந்தேகத்திற்குரிய டிரோன்களால் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள பல இடங்களில் பாகிஸ்தானிலிருந்து வந்த ட்ரோன்கள் பறந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் நியூஸ் 18-யிடம் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் ஒரு டிரோனை சுட்டு வீழ்த்தியதை அடுத்து, மர்ம டிரோன்கள் வந்தவழி திரும்பியதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட் பகுதியில் நேற்று மாலை 6.25 மணிக்கு சந்தேகத்திற்குரிய டிரோன் பறந்ததாகவும், மாலை 6.35 மணிக்கு ராஜோரி மாவட்டத்தில் உள்ள கப்பர் என்ற இடத்திலும், இரவு 7.15 மணிக்கு சம்பாவின் ராம்கர் பகுதியிலும் அடுத்தடுத்த டிரோன்கள் பறந்ததாகவும் தெரிகிறது.
இதையடுத்து, தீவிர விசாரணையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கனாசக் என்ற இடத்தில் சந்தேகத்திற்குரிய செயற்கைக்கோள் தொலைபேசி சிக்னலை கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய ராணுவம், எல்லையோர பாதுகாப்பு படை, சிறப்புக் குழு, ஜம்மு காஷ்மீர் காவல்துறை அடங்கிய கூட்டுப்படை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையின்போது இந்திய ஆயுதப் படைகள் பல பாகிஸ்தானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்திற்குரிய டிரோன்கள்.. செயற்கைக்கோள் தொலைபேசி சிக்னல்.. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு


