Last Updated:
பெங்களூரு ராமமூர்த்தி நகரில் ஷர்மிளா கொலை வழக்கில் பக்கத்து வீட்டு மாணவர் கர்னல் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் ஐடி பெண் ஊழியர் தீவிபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் பக்கத்து வீட்டு இளைஞர் அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு ராமமூர்த்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி 34 வயதான ஐடி பெண் ஊழியர் ஷர்மிளா என்பவர் வீட்டில் தீப்பற்றி எரிந்தது. அங்கு வந்த தீயணைப்பு துறையினர் வீட்டை திறந்து பார்த்தபோது ஷர்மிளா சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இந்நிலையில், முதலில் புகையை சுவாசித்ததால் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தின. பின்னர் அங்கிருந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உயிரிழந்த ஷர்மிளாவின் பக்கத்து வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்த 18 வயதான மாணவர் கர்னலை காவலர்கள் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, ஷர்மிளாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதையும், ஷர்மிளா கூச்சலிட்டதால் அவரது வாயை தனது கையால் நீண்ட நேரம் அடைத்து வைத்திருந்தபோது அவர் உயிரிழந்துவிட்டார் என கர்னல் கூறியுள்ளார். மேலும் தடயங்களை அழிப்பதற்காக படுக்கை அறைக்கு தீவைத்துவிட்டு தப்பியதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை காவலர்கள் கைது செய்து மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
உடலில் ரத்த காயங்கள்.. ஐடி பெண் ஊழியர் கொலையில் திருப்பம்.. சிசிடிவியில் சிக்கிய நபரால் அதிர்ச்சி!


