Last Updated:
கர்நாடகா கதக்கில் பெண் நடத்துநரை பயணி தாக்கிய வீடியோ வைரலாகி சர்ச்சை எழுந்தது.
கர்நாடகாவில் பெண் நடத்துநரை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் கதக்கில் உள்ள சுங்கச் சாவடி அருகே அப்பகுதியை சேர்ந்த சிலர் பேருந்துக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாக காத்திருந்தும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்து ஏதும் வரவில்லை. வந்த ஒன்றிரண்டு பேருந்தும் சூப்பர் ஃபாஸ்ட் என்பதால் அதுவும் நிற்காமல் டோல் கேட்டை கடந்து சென்றன. ஒரு வழியாக அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து, சுங்கச் சாவடியில் நின்று மெதுவாக கிளம்பியுள்ளது. உடனே, அங்கிருந்த பயணிகள் இந்த பேருந்தையும் விட்டுவிட்டால், உரிய நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாது என்று கருதியுள்ளனர்.
இதனால், வேறு வழியின்றி பேருந்தை இடைமறித்து நிறுத்தியுள்ளனர். பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் பயணிகளை ஏற்றுவதற்குப் பதில், ஏன் வண்டியை தடுத்தீர்கள் என்று ஏக வசனம் பேசியுள்ளார். அதற்கு, பேருந்தில் இடம் இருக்கும்போது தங்களை ஏற்றிச் சென்றால் என்ன என்று எதிர் கேள்வி கேட்டு ஒருவர் உள்ளே ஏறியுள்ளார். அதைக் கண்டு ஆத்திரமடைந்த பெண் நடந்துனர், கண்ட இடத்தில் எல்லாம் பேருந்தை நிறுத்த முடியாது என்று அவர் பங்கிற்கு குரலை உயர்த்திப் பேசியுள்ளார்.
அதை காதில் வாங்கிக் கொள்ளாத நபர், நடத்துநரை தள்ளிவிட்டு அவருடை இருக்கையிலேயே ஒய்யாரமாக அமர்ந்து கொண்டார். அதை பார்த்த மற்ற பயணிகளும் பேருந்துக்குள் ஏற முற்பட்டுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய நடத்துநர், தனக்கு கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என ஆவேசமடைந்துள்ளார். அப்போது, கீழே நின்றிருந்த ஒருவர், அனைவரையும் விலக்கிவிட்டு பேருந்தில் ஏறி நடத்துநனரின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.
அதை சற்றும் எதிர்பாராத நடத்துநர், கத்தி கூப்பாடு போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறியதும், தன்னை தாக்கிய நபரை பதிலுக்கு பளார் விட்டுள்ளார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. இத்தனை நடந்தும் பேருந்தில் இருந்த பயணிகள் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்தனர். பின்னர், ஒருசில பெண்கள் முன்வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பணியில் இருந்த பெண் நடத்துநரை தாக்கியவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பெண் நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அரசுப் பேருந்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
January 07, 2026 8:16 PM IST


