தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிற்கும், அமெரிக்காவுக்கும் பல தசாப்தங்களாக மோதல் நீடித்து வரும் நிலையில், முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பாரக் ஓபாமா ஆகியோர் அந்நாட்டின் மீது பல்வேறு தடைகளை விதித்தனர். ஆனால், டிரம்ப் தான் எண்ணெய் ஏற்றுமதிக்கு மொத்தமாக தடை விதித்தார். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மதுரோவின் ஆட்சியை சட்டவிரோதமானது என்று அறிவித்த டிரம்ப், வெனிசுலாவின் PDVSA என்ற அரசு நிறுவனம் அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ய முழுமையான தடை விதித்தார். இதன் மூலம் வெனிசுலாவின் முக்கிய வருவாய் ஆதாரமான அமெரிக்கச் சந்தை பறிபோனது.
அமெரிக்காவின் இந்த தடைக்கு முன்பு வரை, இந்தியா வெனிசுலாவிடமிருந்து ஒரு நாளைக்குச் சுமார் 3,00,000 பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. பின்னர், அமெரிக்கா விதித்த தடை அமலுக்கு வந்ததால், இறக்குமதியின் அளவு, கடுமையாக சரிந்து, நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இதுவே 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
டிரம்ப் நிர்வாகம் விதித்த தடைகள் காரணமாக, இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாக விரும்பாமல் இறக்குமதியை முழுமையாக நிறுத்தின. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மதுரோவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அப்போதைய அதிபர் ஜோ பைடன், வெனிசுலாவிற்கு தற்காலிக தளர்வு அளித்தார். இதன் காரணமாக, இந்தியா மீண்டும் இறக்குமதியை தொடங்கியது. இதனால் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 35,000 பீப்பாய்களை இறக்குமதி செய்தது.
2024 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் மற்றும் நயாரா நிறுவனங்கள் வெனிசுலாவிடமிருந்து மீண்டும் அதிக அளவில் வாங்கத் தொடங்கின. இதனால், இந்தியாவின் இறக்குமதி அளவு, நாள் ஒன்றுக்கு 1,40,000 பீப்பாய்கள் என்ற அளவை எட்டியது. கடந்த ஆண்டு, நாள் ஒன்றுக்கு 1,55,000 பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் இது வெறும் 0.3% முதல் 1% வரை மட்டுமே. தற்போது வெனிசுலா அதிபரை டிரம்ப் அதிரடியாக கைது செய்திருப்பதால், இறக்குமதியில் சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து தனது தேவையில் 35% முதல் 40% வரை, அதாவது சுமார் 16-17 லட்சம் பீப்பாய்கள் பெற்று வருகிறது. எனவே, வெனிசுலாவின் 1.5 லட்சம் பீப்பாய்கள் நின்றாலும், அதை ரஷ்யா அல்லது ஈராக் மூலம் இந்தியா மிக எளிதாக ஈடுகட்டிவிடும். வெனிசுலா எண்ணெய் பொதுவாகச் சர்வதேச சந்தை விலையை விட பீப்பாய்க்கு 8 முதல் 10 டாலர்கள் வரை தள்ளுபடி விலையில் கிடைத்து வந்தது. இந்த இறக்குமதி நின்றால், எண்ணெய் நிறுவனங்களுக்குச் சிறு நஷ்டம் ஏற்படலாமே தவிர, சாமானிய மக்களுக்கு பெட்ரோல் விலை உயரும் அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. உலக அளவில், மொத்த எண்ணெயில், வெனிசுலா 17 சதவிகிதத்தை கொண்டுள்ளது. ஆனால் மொத்த தேவையில் அந்நாட்டின் பங்களிப்பு வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே.
வெனிசுலா அரசியல் நெருக்கடி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா? – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

