Last Updated:
கடந்த ஆண்டு ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையான நிலையில், இந்த ஆண்டு அதன் விலை உச்சம் தொட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக அடுக்கம், வெள்ளக்கெவி, பாலமலை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஆரஞ்சு சாகுபடி செய்யப்படுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் ஆரஞ்சு தனித்துவமான சுவையுடன் காணப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் கொடை ஆரஞ்சுக்கு ஆண்டுதோறும் நல்ல மவுசு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஆரஞ்சு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக மலைக்கிராம விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விளைச்சல் குறைந்ததன் காரணமாக, தற்போது ஒரு கிலோ கொடை ஆரஞ்சு ₹90 முதல் ₹100 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகளும், பழக்கடை வியாபாரிகளும் சற்று நிம்மதியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சந்தைகளுக்கு ஆரஞ்சு வரத்து அதிகரித்திருந்தாலும், கொடைக்கானல் ஆரஞ்சு விளைச்சல் குறைவாக இருந்ததால் சீரான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு ஒரு கிலோ ஆரஞ்சு ₹25 முதல் ₹30 வரை மட்டுமே விற்பனையான நிலையில், இந்த ஆண்டு விலை மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பல ஆண்டுகளாக உள்ள பாரம்பரிய ஆரஞ்சு மரங்கள் நோய் தாக்கி பட்டுப்போய், விளைச்சல் முற்றிலும் குறைந்துள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு தோட்டக்கலைத் துறையினர் புதிய, தரமான ஆரஞ்சு நாற்றுகளை வழங்க வேண்டும் என்றும் மலைக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Jan 05, 2026 11:10 AM IST

