Last Updated:
உத்தரபிரதேச ஹர்தோய் மாவட்டத்தில் ராம் கிஷோர் தலைமையிலான புரோக்கர்கள், 20 ஆயிரம் ரூபாய் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுத் தந்தது போலீசால் கண்டுபிடிக்கப்பட்டது.
20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும், கொலை, கொள்ளை, பாலியல் குற்றச்சாட்டு என எந்த வழக்காக இருந்தாலும், போலிஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தை ஏமாற்றி ஜாமின் பெற்றுத் தந்த புரோக்கர்கள் உத்தரபிரதேச போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
ஜாமின் வேண்டுமா கவலையை விடுங்கள்.. 20 ஆயிரம் ரூபாய் வெட்டினால் போதும்.. கோர்ட்டு வாசலில் இந்தப் பக்கம் புகுந்து. அந்தப் பக்கமாக வெளியே வந்து விடலாம்.. என குற்றவாளிகளுக்கு குலசாமிகளாக திகழ்ந்த புரோக்கர் கும்பல் தான் தற்போது வசமாக சிக்கியிருக்கிறது. ஜாமின் பெற்றுத் தருவதைக் கூட ஒரு புரோக்கர் தொழிலாக மாற்ற முடியும் எனக் கண்டுபிடித்து இந்த உலகத்திற்கு எடுத்துரைத்த அந்த நூதன தரகர் கும்பலின் பகீர் பின்னணி என்ன?
உத்தரப்பிரதேசத்தின் உள்ள ஹர்தோய் மாவட்டத்தில் தான், இந்த தொழில்முறை ஜாமீன் தரகர் கும்பல் குதூகலமாக செயல்பட்டு வந்திருக்கிறது. கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை என எந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தாலும் சரி அவர்களுக்கு ஜாமின் வாங்கித் தருவது எங்கள் பொறுப்பு என அறிவித்து கல்லா கட்டியிருக்கின்றனர்.
போலி நில வருவாய் ஆவணங்கள், போலியான ஆதார் அட்டைகள் மற்றும் ஜோடிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை உருவாக்கி குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைக்க என்னென்ன வேலைகளை எல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனை பிராடு வேலைகளையும் அண்டர்கிரவுண்டில் செய்து மோசடியை நேக்காக அரங்கேற்றியிருக்கிறது இந்த தொழில்முறை ஜாமின் தரகர் கும்பல். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடிக் கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்று தந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதற்காக ஒரு வழக்கிற்கு சுமார் 20,000 ரூபாய் வரை வசூலித்துள்ளனர். இவர்களில் ராம் கிஷோர் என்பவர் 13 வழக்குகளில் போலி நில வருவாய் ஆவணங்களை ஏற்பாடு செய்து கொடுத்தது தெரிய வந்திருக்கிறது. அவரது கூட்டாளிகளான விஸ்வநாத் பாண்டே, தர்மேந்திரா, பிங்கு, அமித் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் ஜாமின் கையெழுத்து போட்டுள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் விண்ணப்பங்களை எழுதித் தரும் வேலை பார்த்து வந்த பிங்கு என்கிற பிரேம் சங்கர் குற்றவாளிகளுக்கு ஜாமின் தரக்கூடிய நபர்களை ஏற்பாடு செய்வதிலும் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுப்பதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
பிரவீன் தீட்சித் என்கிற ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கொலைக் குற்றவாளி. தற்போது உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனில் வெளியே இருந்தார். அவர் உட்பட ஆறு பேர் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். நீதிமன்றத்தில் அரங்கேற்றப்பட்டஇந்த மோசடி விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ஜாமின் தரகர்களை வேட்டையாடும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.20 ஆயிரம் இருந்தால் போதும்.. கொலை, கொள்ளை, பாலியல் வழக்குகளுக்கு ஜாமீன்.. போலீசில் சிக்கிய புரோக்கர்களால் அதிர்ச்சி!


