ரவாங்:
முறையான பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகள் இல்லாததால் கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்து அடிப்படை உரிமைகளையும் இழந்து தவித்த 7 உடன்பிறப்புகளுக்கு, மலேசியக் குடியுரிமைக்கான ‘MyKad’ வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சகோதரர்களின் பெற்றோரது திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் பிறப்பைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய முடியாமல் போனது.
முறையான அடையாள ஆவணங்கள் இல்லாததால், இந்தச் சகோதரர்களால் அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கவோ, பொது மருத்துவமனைகளில் சலுகைகளைப் பெறவோ அல்லது சட்டப்பூர்வமான வேலைகளில் சேரவோ முடியவில்லை.
இவர்களின் தந்தை காலமான பிறகு, குடும்ப உறவை உறுதிப்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
2023 டிசம்பரில் இந்த விவகாரம் குறித்து அறிந்தவுடன், தேசியப் பதிவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ பத்ருல் ஹிஷாம் அலியாஸ் தலைமையிலான குழுவினர் நேரடியாக இதில் கவனம் செலுத்தினர். தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பத் தொடர்பை உறுதி செய்ய டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்பட்டன.
இவர்களின் பெற்றோரது திருமணம் முதலில் உலு லங்காட் இஸ்லாமிய சமய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஷரியா நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலமே பிள்ளைகளுக்கான ஆவணச் சிக்கல் தீர்க்கப்பட்டது.
“அடையாள அட்டை இல்லாமல் இவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. ஊடகங்களும் பொதுமக்களும் இது போன்ற ஆவணங்கள் இல்லாத நபர்களை அடையாளம் காணத் தொடர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும். உங்களது தகவல்கள் இன்றி எங்களால் இதுபோன்ற மறைமுகமான வழக்குகளைக் கண்டறிய முடியாது” என்று, சுங்கை புவாயாவில் (Sungai Buaya) உள்ள அந்தச் சகோதரர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று அடையாள அட்டைகளை வழங்கிய டத்தோ பத்ருல் ஹிஷாம் கூறினார்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும், NRD மேற்கொண்ட “MEKAR”போன்ற நேரடிச் சேவைத் திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




