Last Updated:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே மாசுபட்ட குடிநீரை பருகியதால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பாகீரத்புரா பகுதியில், கடந்த டிசம்பர் 25-ம் தேதி மாசுபட்ட குடிநீரை மாநகராட்சி குழாய்கள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.
நர்மதா நதியின் நீர் மாநகராட்சி குடிநீர்க் குழாய் இணைப்பு மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனைக் குடித்ததால் வாந்தி, வயிற்றுப் போக்கு, மயக்கம் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முக்கியமான குடிநீர்க் குழாய் விநியோகம் செய்யும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும் அதன் மீது கழிவறை ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும் இந்தூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
ஆயிரத்து 146 பேருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாக மாநகராட்சியின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கழிவுநீர் கலந்தால் வாந்தி, வயிற்றுப் போக்கு மட்டும்தான் இருக்கும் இறப்பு ஏற்படாது, மற்ற விஷம் ஏதும் கலந்திருக்கலாம் என்பதால் முறையாக விசாரிக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
மாசுபட்ட குடிநீர் குடித்தவர்களுக்கு நேர்ந்த துயரம்; மத்தியப் பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


