ஜோகூர் பாரு:
ஜோகூர் பாருவில் உள்ள சில அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஏழு வெளிநாட்டுப் பெண்களை ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்கள் மற்றும் உளவுத்துறைத் தகவல்களின் அடிப்படையில், கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) இரவு 9 மணியளவில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த ‘ஓப்ஸ் கெகார்’ (Ops Gegar) சோதனை நடத்தப்பட்டது என்று, ஜோகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தாருஸ் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஏழு பெண்களும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 25 வயது முதல் 41-க்குள் இருக்கும் என்றும், இவர்கள் WeChat மற்றும் Telegram போன்ற சமூக வலைதளச் செயலிகள் மூலம் தங்களது சேவைகளை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களைக் ஈர்த்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
இவர்கள் ஒரு முறை சேவை வழங்குவதற்கு 230 ரிங்கிட் முதல் 400 ரிங்கிட் வரை கட்டணமாகப் பெற்றுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கான சமூக வருகை பாஸை (Social Visit Pass) தவறாகப் பயன்படுத்தி இவர்கள் இந்தச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிகள் 1963-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மேல் விசாரணைக்காகச் செட்டியா டிராபிகா (Setia Tropika) குடிநுழைவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவ ஆறு சாட்சிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று, அவர் மேலும் கூறினார்.
The post ஜோகூர் பாருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பாலியல் தொழில் – 7 வெளிநாட்டுப் பெண்கள் கைது! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

