Last Updated:
அவர் தனது பழைய உடல் தகுதியை பெற இன்னும் சில வாரங்கள் தேவைப்படும் எனத் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, பவுண்டரி லைன் அருகில் ஒரு கடினமான கேட்ச்சை பிடிக்க முயன்றபோது சீனியர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு மண்ணீரலில் காயம் ஏற்பட்டது. இது ஒரு உட்புற உறுப்பு காயம் என்பதால் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது.
தற்போது அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யத் தொடங்கினாலும், ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் 50 ஓவர்கள் பீல்டிங் செய்யும் அளவுக்கு அவரது உடல் இன்னும் ஒத்துழைக்கவில்லை. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இன்னும் முழுமையான ‘பிட்னஸ் கிளியரன்ஸ்’ வழங்கப்படவில்லை.
நீண்ட நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்ததாலும், போதிய உடல் பயிற்சி இல்லாததாலும் அவரது தசை வலிமை குறைந்துள்ளது. இதன் காரணமாக அவர் சுமார் 6 கிலோ உடல் எடையை இழந்துள்ளார். இது ஒரு தடகள வீரருக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஜனவரி 11 முதல் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. அவர் தனது பழைய உடல் தகுதியை பெற இன்னும் சில வாரங்கள் தேவைப்படும் எனத் தெரிகிறது.


