கோத்தா பாரு:
மெலூர் பொதுச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு, மேலும் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 முதல் 50 வயதுக்குட்பட்ட 5 ஆண்கள் மற்றும் 5 பெண்களுக்கு வழங்கப்பட்ட முந்தைய தடுப்புக் காவல் முடிவடைந்த நிலையில், மாஜிஸ்திரேட் அமிருல் அஷ்ரப் அப்துல் ரஷீத் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இது தவிர, 28 மற்றும் 30 வயதுடைய மேலும் இரண்டு ஆண்களுக்கு இன்று முதல் வியாழக்கிழமை வரை 3 நாட்கள் தடுப்புக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 25 (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணியளவில், 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை, 20 வயதுடைய மற்றொரு பெண் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இரு பெண்களுக்கும் இடையிலான இந்தத் தனிப்பட்ட மோதல், பின்னர் இரு தரப்பு குடும்ப உறுப்பினர்களும் இதில் தலையிட்டதால் பெரிய அளவிலான கலவரமாக மாறியது என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் அந்த 19 வயதுப் பெண் உடல் முழுவதும் காயங்களுக்கு உள்ளானார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது என்று, கோத்தா பாரு மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் முகமட் ரோஸ்டி தாவூட் கூறினார்.
இந்தக் கலவரம் தொடர்பாக மொத்தம் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்துத் தண்டனைச் சட்டம் பிரிவு 147-ன் (கலவரத்தில் ஈடுபடுதல்) கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




