Last Updated:
இந்தத் தொடரில் இத்தாலி அணி முதல்முறையாக உலகக்கோப்பைக்குள் நுழைந்து வரலாறு படைத்துள்ளது
10-வது டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை ஒரு மாத காலம் இந்த கிரிக்கெட் திருவிழா நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன
இந்த நிலையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஓமன் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஓமன் அணியை அனுபவ வீரர் ஜதிந்தர் சிங் வழிநடத்தவுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விநாயக் சுக்லா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடிய 43 வயதான மூத்த வீரர் அமீர் கலீம் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்;
அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய-பசிபிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்ததன் மூலம் உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ள ஓமன் அணி, இம்முறை குழு B-இல் இடம் பிடித்துள்ளது.
இந்த பிரிவில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் ஓமன் மோதவுள்ளது. 11 புதுமுக வீரர்களுடன் களம் காணும் ஓமன் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 9-ம் தேதி கொழும்பில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.
இந்தத் தொடரில் இத்தாலி அணி முதல்முறையாக உலகக்கோப்பைக்குள் நுழைந்து வரலாறு படைத்துள்ளது. லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறும். இந்தியா தனது லீக் ஆட்டங்களை மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் விளையாடவுள்ளது.
ஓமன் அணி – ஜதீந்தர் சிங் (கேப்டன்), விநாயக் சுக்லா, முகமது நதீம், ஷகீல் அகமது, ஹம்மத் மிர்சா, வாசிம் அலி, கரண் சோனாவலே, ஷா பைசல், நதீம் கான், சுஃப்யான் மெஹ்மூத், ஜே ஒடெத்ரா, ஷபிக் ஜான், ஆஷிஷ் ஒடெதாரா, ஜித்தன் ரமானந்தி, ஹஸ்னயின் அலி.


