Last Updated:
மண்டல பூஜை நிறைவையொட்டி டிச.27-ம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. நாளை (டிச.31) முதல் மகர விளக்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (30.12.2025) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
மண்டல பூஜை நிறைவையொட்டி டிச.27-ம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. நாளை (டிச.31) முதல் மகர விளக்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்துவைத்து விளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து தீபாராதனைக்குப் பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
நாளை (டிச.31) அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும்.
முன்னதாக மகர விளக்கு பூஜையையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து ஜனவரி 12-ந் தேதி ஊர்வலமாக புறப்படும். முன்னதாக ஜன.11-ந் தேதி எருமேலியில் வலியபேட்டை துள்ளல் நடைபெறுகிறது. அதனையடுத்து, ஜனவரி 19-ம் தேதி வரை நடை திறந்து இருக்கும். அன்று இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ஜன.13-ஆம் தேதி 35 ஆயிரம் பக்தர்களுக்கும், ஜன.14-ஆம் தேதி 30 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.


