இந்திய ஜெர்சியை அணிந்து, இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியதற்காக பாகிஸ்தான் கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்துக்கு, சர்வதேசப் போட்டிகளில் விளையாட நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் நடந்த தனியார் கபடி போட்டியில், பாகிஸ்தான் சர்வதேச கபடி வீரரான உபைதுல்லா ராஜ்புத், “இந்தியா” என்று பெயரிடப்பட்ட அணிக்காக விளையாடினார்.
மேலும், இந்திய ஜெர்சியை அணிந்து, இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியது பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் இந்த போட்டியில் பங்கேற்றதாக அவருக்கு நிரந்தர விதித்து பாகிஸ்தான் கபடி சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான 4வது டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி ஐந்து டி20 போட்டியில் விளையாடும் நிலையில், முதல் 3 போட்டிகளில் வென்று இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது.
திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கையின் பந்துவீச்சை, இந்தியாவின் தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் துவம்சம் செய்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 162 ரன்களை குவித்த நிலையில், ஷபாலி வர்மா 46 பந்துகளில் 79 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில், ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில் 80 ரன்களை சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ரிச்சா கோஷும் 16 பந்துகளில் 40 ரன்கள் என அதிரடி காட்ட, இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களை குவித்தது.
தொடர்ந்து விளையாடிய இலங்கை, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே சேர்த்து 30 ரன்களில் தோல்வியடைந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
கவுதம் கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்த நிலையில், பயிற்சியாளர் கம்பீரை மாற்றிவிட்டு, விவிஎஸ் லட்சுமணனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது.
அது வதந்தி என விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சாய்கா, அடிப்படை இல்லாத ஆதாரமற்ற செய்தி என்றும் கூறினார். மேலும், பிசிசிஐ சார்பில் விவிஎஸ் லட்சுமணனை அணுகவில்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலகினார். இதையடுத்து 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கம்பீரின் தலைமையில் உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. கம்பீரின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளதால், அவர் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பார் என்ற பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

