Last Updated:
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியையும், அவரது தலைமையிலான அரசையும் விமர்சித்தார்.
மக்களின் உரிமைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நசுக்கி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார்.
1885-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் 140ஆவது நிறுவன நாள், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி கட்சித் தலைமை பொறுப்பை வகித்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மக்களின் உரிமைகள் பாதுகாப்பை அதிகரித்ததாகவும், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நேர்மாறாக செயல்படுவதாகவும் சாடினார்.
இதனிடையே, காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்ததாகவும், ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் வெறுப்புணர்வையும், அநீதியையும் பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


